எல்லாருக்கும் வணக்கம்,
title-ல பாத்துட்டு புல்லரிச்சு போய் இந்த பய என்னமா சிந்திக்கிறான்னு நெனைக்கிற நல்லவங்களுக்கு நேர்மையா ஒரு விஷயத்த சொல்லிக்கிறேன். தமிழ் cinema பாடல்கள அடிக்கடி கேக்குறவங்களுக்கு, இந்த title-ல நான் தசாவதாரம் பாடல் வரிகள்-ல இருந்து சுட்டேன்-னு நல்லா தெரியும்.
எனக்கும் ரொம்ப நாளாவே ஒரு blog எழுதணும்னு விபரீத ஆசை ஒண்ணு இருந்துச்சு. கூடவே எங்க நம்ம blog எழுதுனதுக்கு அப்புறம் சோ, சுஜாதா மாதிரி பெரிய ஆள் ஆகிடுவோமோன்னு ஒரு பயமும் மனசுக்குள்ள இருந்துச்சு. (எல்லாம் ஒரு விளம்பரம்தான், சோவும் சுஜாதாவும் என்னை மன்னிப்பார்களாக). சரி blog எழுதுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா அத உரைநடை தமிழ்ல எழுதலாமா இல்ல english கலந்த பேச்சு வழக்குல எழுதலாமான்னு ஒரு சின்ன குழப்பம் வந்துச்சு. ரொம்ப உரைநடை தமிழ்ல எழுதுனா அது மக்கள் tv comperes-க்கு மா.நன்னன் class எடுக்குற மாதிரி இருக்கும்னு நெனைச்சு அந்த idea-வ drop பண்ணிட்டேன் (நல்லவேளை அந்த கொடுமை நடக்கலைன்னு சந்தோஷமா இருக்கா?).
sorry ரொம்ப கடிக்கிறேன்னு நெனைக்கிறேன். சரி matter-க்கு வரேன். சுதந்திர தினத்துக்கு யார் யாரோ message சொல்றாங்க. இந்த நாட்டோட கண்ணியமிக்க குடிமகனா நாமளும் ஏன் ஒரு message சொல்ல கூடாதுன்னு மனசுக்குள்ள ஒரு நப்பாசை தோணுச்சு. அதுனால இந்த நாட்டோட எதிர்காலத்த பத்தி ஏதாவது message சொல்லலாம்னு decide பண்ணினேன். கடந்த மாசம் parliment-ல நடந்த நம்பிக்கை!!!!! வாக்கெடுப்ப (இவர்களை பொறுத்தவரை 'வீழ்வது நாடாயினும் வாழ்வது நானாகட்டும்!!!') பாத்ததுக்கு அப்புறம் நம்ம நாட்டுக்கும் ஒரு எதிர்காலம் இருக்குமானு சந்தேகம் வந்துச்சு. இப்படி ஒரு சந்தேகத்தோட நான் இந்த நாட்டோட எதிர்காலத்த பத்தி சொல்றத விட சொல்லாம இருக்குறதே மேல்-னும் தோணுச்சு. அதுனால நம்ம (Software) தொழில் தர்மப்படி யாராவது நல்லவங்க நம்ம நாட்ட பத்தி ஏதாவது சொல்லிருந்தா அதையே copy-paste பண்ணிரலாம்னு முடிவு பண்ணினேன்.
இதோ உங்களுக்காக, 'இந்தியாவின் எதிர்காலம்' என்னும் தலைப்பில் சுவாமி விவேகானந்தர் 110 வருடங்களுக்கு முன்னர் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவின் சில பகுதிகள்:
உலகில் வேறெந்த நாட்டையும் அறிவு என்பது தன் இருப்பிடமாகக் கொள்ளுமுன் குடிபுகுந்த தாயகம் நமது புராதன பாரதம். கடல்போல் பொங்கிப் புரண்டோடும் பேராறுகளும், அடுக்கடுக்காய் உயர்ந்தெழுந்த சிகரங்கள் மீது பனிமுடி தரித்து, ஏதோ வானுலக ரகசியங்களை எட்டிப்பார்க்க விழைவதுபோல் விண்முட்ட நிற்கின்ற நிலையான இமயமலைத் தொடர்களும் அதன் ஆன்மீக மாட்சிமையைப் புறத்தில் காட்டுவதுபோல் உள்ளது.இதுவரை வழ்ந்தவர்களுள் மகத்தான ரிஷிகளின் திருப்பாதங்கள் இதோ இந்த பாராத மண்ணில்தான் நடை போட்டன. மனிதனின் இயல்பு பற்றியும் அகவுலகம் பற்றியும் இங்குதான் முதலில் ஆராய்ச்சிகள் தொடங்கின. ஆன்மாவின் அமரத்துவம், அனைத்தையும் ஆட்சிபுரிகின்ற கடவுள், இயற்கையிலும் மனிதனிலும் ஊடுருவி நிற்கின்ற இறைவன் போன்ற கோட்பாடுகள் இங்குதான் முதலில் எழுந்தன. இங்குதான் மதம் மற்றும் தத்துவத்திலுள்ள மிகவுயர்ந்த லட்சியங்கள் உச்ச நிலைகளை எட்டின. இந்த நாட்டிலிருந்துதான் ஆன்மீகமும் தத்துவமும் அலைபோல் மீண்டும் மீண்டும் பாய்ந்து சென்று உலகை ஆக்ரமித்தது. நலிந்து கொண்டிருக்கின்ற மனித குலத்திற்கு உயிரையும் உத்வேகத்தையும் ஊட்டுவதற்கு இந்த பூமியில் இருந்துதான் மறுபடியும் அலைகள் புறப்பட்டுச் சென்றாக வேண்டும். நூற்றுக்கணக்கான அந்நியர் படையெடுப்புகளும், நூற்றுக்கணக்கான பழக்க வழக்கங்களின் காரணமாக எழுந்த புரட்சிகளும் பல நூற்றாண்டுகளாக ஏற்படுத்திய அதிர்ச்சிகளை ஏற்றும் நிலைகுலையாமல் நிற்பதும் அதே இந்தியாதான். என்றும் குறையாத சக்தியுடன், அழியாத வாழ்வுடன் உலகின் எந்தப் பாறையை விடவும் உறுதியாக இருப்பது அதே நாடுதான். ஆன்மாவைப்போல், நமது நாடும் தோற்றமும் முடிவும் இல்லாததாக நித்தியமானதாக உள்ளது. இத்தகைய நாட்டின் அருமைக் குழந்தைகள் நாம்.
இந்தியாவின் குழந்தைகளே, சில செயல்முறை விஷயங்களைப்பற்றிப் பேசுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். கடந்த காலப் பெருமைகளை உங்களுக்கு நான் நினைவுபடுத்துவதன் காரணம் இதுதான். கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பது சீரழிவிற்கே வழி வகுக்கும், அது வெறும் வீண் வேலை; எனவே நாம் எதிர்காலத்தைப்பற்றி எண்ண வேண்டும் என்று பலர் கூறக் கேட்டதுண்டு. உண்மைதான்.
ஆனால் கடந்த காலத்திலிருந்துதான் எதிர்காலம் உருவாகிறது. எனவே உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு திரும்பிப் பாருங்கள். பின்னால் உள்ள வற்றாத அந்த ஊற்றுகளிலிருந்து நன்றாகப் பருகுங்கள். அதன்பின்னர் முன்னே பாருங்கள். பீடுநடை போட்டுச் செல்லுங்கள். பாரத்தை முன்பிருந்ததைவிட ஒளிமயமானதாக, சிறப்பானதாக, உன்னதமானதாக உருவாக்குங்கள். நம் முன்னோர்கள் மகத்தானவர்களாக இருந்தாரகள். முதலில் அதை நினைத்துப் பார்க்க வேண்டும். நமது ரத்தக் குழாய்களில் ஓடுகின்ற ரத்தம் எது என்பதை அறிய வேண்டும். அந்த ரத்தத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். பழங்காலத்தில் நமது முன்னோர்கள் மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதிலும் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையிலிருந்தும், பழம்பெருமையைப் பற்றிய உணர்விலிருந்தும் முன்னைவிடச் சிறப்பானதொரு இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.
என் எண்ணம் இதுதான்: நமது நூல்களில் புதைந்து கிடக்கின்ற, மடங்களிலும் காடுகளிலும் மறைந்தே விட்டது போல் ஏதோ சிலரின் சொத்தாக இருக்கின்ற ஆன்மீகப் போக்கிஷக்களை முதலில் வெளியே கொண்டு வர வேண்டும். அந்த ஏதோ சிலரின் கைகளிலிருந்து மட்டுமல்ல, அவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, அணுக முடியாத கவசம் போலுள்ள அந்த மொழியிலிருந்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வளமை பெற்று வந்துள்ள சமஸ்க்ருத வார்த்தைகளிலிருந்து வெளியே கொண்டு வரவேண்டும். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்த கருத்துக்கள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுச் சொத்தாக வேண்டும்.
உலகிற்கு நீங்கள் அறிவுரையைப் பொழியலாம். அதனால் பெரிய நன்மை எதுவும் விளைந்து விடப் போவதில்லை. ரத்தத்தில் பண்பாடு வர வேண்டும். தற்காலத்தில் கல்வியில் உன்னத வளர்ச்சி கண்ட பல நாடுகளை நாம் அறிவோம். அதனால் என்ன! அவர்கள் புலிகளைப்போல் உள்ளார்கள். காட்டு மிராண்டிகளைப்போல் இருக்கிறார்கள். ஏனெனில் அங்கே பண்பாடு இல்லை. நமது நாகரீகத்தைப் போலவே அறிவும் அங்கே தோலை மட்டுமே தொட்டுள்ளது. சிறு சிராய்ப்பு போதும், பழைய காட்டு மிராண்டித்தனம் வந்துவிடும். இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதுதான் ஆபத்து. சாதாரண மக்களுக்கு அவர்களுடைய தாய் மொழியில் போதியுங்கள். கருத்துக்களைக் கொடுங்கள். அதனால் அவர்கள் விஷயங்களை அறிந்து கொள்வார்கள். ஆனால் அதை விட மேலான ஓன்று அவர்களுக்குத் தேவை, பண்பாட்டை அளியுங்கள். அவர்களுக்கு அதை கொடுக்காத வரையில் அந்த உயர்த்தப்பட்ட நிலையில் அவர்களால் நிலையாக இருக்க முடியாது.
தற்போதைய கல்வியில் சில நன்மைகள் உள்ளன. ஆனால் மிக அதிகமான தீமைகள் இருக்கின்றன. மிக அதிகமான அந்தத் தீமைகள் கொஞ்சமான நன்மையைக் கீழே அமுக்குகின்றன. முதலாவதாக அது மனிதனை உருவாக்குகின்ற கல்வி அல்ல. அது முழுக்க முழுக்க வெறும் எதிர்மறையான கல்வி.எதிர்மறைக் கல்வியும் சரி, அல்லது எதிர்மறை உணர்ச்சியை உண்டு பண்ணும் எந்தப் பயிற்சியும் சரி அது சாவை விடக் கொடியது. குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். அங்கே அவன் முதலில் படிப்பது தன் தந்தை ஒரு முட்டாள்; இரண்டாவது, தன் பாட்டன் ஒரு பைத்தியக்காரன்; மூன்றாவதாக, தன் ஆசிரியர்கள் அனைவரும் பாசாங்குக்காரர்கள்; நான்காவதாக, எல்லா சாஸ்திரங்களும் பொய். இப்படித்தான் அவனது படிப்பு உள்ளது. வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்க முடியாத உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை உங்கள் மூளைக்குள் திணிப்பது அல்ல கல்வி.வாழ்கையை வளப்படுத்துகின்ற,மனிதனை உருவாக்குகின்ற, குணத்தை மேம்படுத்துகின்ற, கருத்துக்களை ஜீரணம் செய்யத்தக்க கல்வியே நாம் வேண்டுவது. ஐந்தே ஐந்து கருத்துக்களை நன்கு கிரகித்து, அவை உங்கள் வாழ்க்கையாக, நடத்தையாகப் பரிணமித்து நிற்கச் செய்ய முடியுமானால், ஒரு புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனை விட நீங்கள் அதிகமான கல்வி பெற்றவர்.
நாம் மகத்தானதோர் எதிகால இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், அதற்கான ரகசியம் முழுவதும் இயக்கங்களை உருவாக்குவதிலும், ஆற்றலைச் சேமிப்பதிலும், சங்கல்பங்களை இணைப்பதிலும் இருக்கிறது. அதர்வண வேத சம்ஹிதையில் உள்ளதோர் அற்புதமான பாடல் என் நினைவில் வருகிறது - "நீங்கள் எல்லோரும் ஒரே மனத்தவராக இருங்கள்.ஒரே எண்ணம் உடையவராக இருங்கள். ஒரே மனத்தவராக இருப்பது சமுதாயத்தின் ரகசியம். 'திராவிடன்', 'ஆரியன்' முதலான அற்ப விஷயங்களைப் பற்றி எல்லாம் நீங்கள் சண்டையிட்டுக்கொண்டிருக்குந்தோரும் எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்கான ஆற்றலையும் சக்தியையும் சேமிப்பதிலிருந்து மேலும் மேலும் விலகிப் போகிறீர்கள். நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், எதிர்கால இந்தியா முற்றிலும் அதையே சார்ந்திருக்கிறது.சங்கல்ப ஆற்றலைச் சேமித்தல், அவற்றை ஒருங்கிணைத்தல், அவை அனைத்தையும் ஒரே மையத்தில் திரட்டுதல். - இதுதான் ரகசியம்.
ஒவ்வொரு சீனனும் தான் விரும்புகின்ற வழியில் சிந்திக்கிறான். ஆனால் எண்ணிக்கையில் குறைந்த ஜப்பானியரோ அனைவரும் ஒரே வழியில் சிந்திக்கின்றனர். விளைவு உங்களுக்கே தெரியும். உலக வரலாறு முழுவதும் இவ்வாறே நடந்துள்ளது. கட்டுக்கோப்பான சிறிய நாடுகளே கட்டுப்பாடற்ற பெரிய நாடுகளை எப்போதும் ஆள்கின்றன. இது இயல்பானதுதான். ஏனெனில் சிறிய கட்டுக்கோப்பான நாடுகளுக்குத் தங்கள் கருத்துக்களை ஒரே மையத்தில் குவிப்பது எளிதாக உள்ளது.அதன்மூலம் அவை வளர்ந்து விடுகின்றன. கட்டுப்பாடற்ற மக்களால் ஒன்றாகச் சேரவும் முடிவதில்லை. இந்தக் கருத்து வேற்றுமைகள் எல்லாம் விலகியே தீர வேண்டும்.
மற்றொரு குறைபாடும் நம்மிடம் உள்ளது. பெண்கள் என்னை மன்னிக்க வேண்டும்.பல நூற்றாண்டுகளின் அடிமை வாழ்வின் காரணமாக நாமெல்லாம் பெண்களைப் போலவே ஆகிவிட்டோம். இந்த நாட்டிலும் சரி, வேறு எந்த நாட்டிலும் சரி மூன்று பெண்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் சேர்ந்திருக்க முடியாது, அதற்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் பெரிய பெரிய சங்கங்களை உருவாக்குவார்கள், பெண்சக்தி முதலியவை பற்றியெல்லாம் பெரிய அறிக்கைகளை வெளியிடுவார்கள்.அவ்வளவுதான், அதற்குள் சண்டை வந்து விடும். பிறகு ஆண்கள் வந்து அவர்களை அடக்கியாள நேரும். இன்னும் உலகம் முழுவதிலும் அவர்களை ஆள ஆண்கள் தேவைப்படுகிறார்கள்.பெண்களை நடத்திச் செல்ல ஒரு பெண் முன்வந்தாலோ, எல்லோருமாகச் சேர்ந்து விமர்சித்து, கிழிகிழிஎன்று கிழித்து அவளை ஒதுக்கி விடுவார்கள். ஆனால் ஆண் ஒருவன் வரட்டும் அவன் அவர்களை அவ்வப்போது திட்டியதும், சற்று கடினமாக நடத்தியதும் எல்லாம் சரியாகிவிடும். நம் நாட்டிலும் நம்மவருள் ஒருவர் எழுந்து மகத்தானவராக மாற முயற்சிப்பாரானால், உடனே நாம் எல்லோரும் சேர்ந்து அவரை அமுக்க முயற்சிப்போம். ஒரு அந்நியன் வந்து நம்மை எட்டி உடைத்தால் கூட அது பரவாயில்லை. நாம் இப்படியே பழக்கப்பட்டு விட்டோம். இல்லையா! அடிமைகள் சிறந்த எஜமானர்கள் ஆக வேண்டும். எனவே அடிமையாக இருப்பதை விட்டு விடுங்கள்.
இனிவரும் ஐம்பத்து ஆண்டுகளுக்கு நமது ஆதார சுருதி இதுவே.- ஈடிணையற்ற நமது இந்தியத்தாய். அதுவரை மற்ற எல்லா வீண் தெய்வங்களும் நம் மனத்திலிருந்து மறைந்து விடட்டும். இந்த இந்தியத்தாயை வணங்கினால், பிற எல்லா தெய்வங்களையும் வணங்கும் திறன் பெறுவோம். அரைமைல் ஊர்ந்து செல்லவே முடியவில்லை. அதற்குள் அனுமனைப் போல் கடலைத் தாண்ட விருபுகின்றோம். இது முடிகிற காரியமில்லை. நமக்குத் தேவை சித்த சுத்தி, இதயத் தூய்மை. முதலில் உங்களைச் சுற்றி இருப்பவர்களை வழிபடுங்கள். மனிதர்கள், மிருகங்கள் எல்லாமே நம் தெய்வங்கள். நாம் வணங்க வேண்டிய முதல் கடவுள் நம் நாட்டு மக்கள். ஒருவரோடு ஒருவர் பொறாமை கொண்டு சண்டையிடுவதர்க்குப் பதிலாக, இவர்களை நாம் வழிபட்டாக வேண்டும்.
நாம் பிறரிடமிருந்து கற்க வேண்டியவை ஏராளம் உள்ளன. பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள மறுப்பவன் செத்தவனே. நல்லவற்றை மற்றவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவைகளை உங்கள் இயல்பிற்கு ஏற்ப கிரகித்துக் கொள்ளுங்கள். மற்றவர்களாக மாறாதீர்கள். இந்திய வாழ்க்கையிலிருந்து வெளியே இழுக்கப்பட்டவர்களாகி விடாதீர்கள். இந்தியர்கள் மற்ற இனத்தவரைப் போல் உடையுடுத்தி, உண்டு வாழ்ந்தால் இந்தியாவிற்கு நன்மை விளையும் என்று ஒரு கணம் கூட நினைக்காதீர்கள். சில ஆண்டுப் பழக்கத்தை விடுவதே எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த சிறப்பான தேசிய வாழ்க்கை எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக உங்கள் இரத்தத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது கடவுளுக்கே தெரியும்.
என் நாட்டு மக்களே! நமது தேசியக் கப்பல் நாகரீகத்தைச் சுமந்தபடி, மதிப்புமிக்க தன் செல்வத்தை உலகிற்கு வழங்கி வளப்படுத்தியபடி யுகயுகாந்திரங்களாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான மக்களைக் கரை சேர்த்துள்ளது. துன்பக்கடலைத் தாண்டிச் செல்ல உதவியுள்ளது. இன்று உங்கள் குறையாலோ, வேறு எந்தக் காரணத்தினாலோ இந்தக் கப்பலில் சிறு ஓட்டை விழுந்து விட்டது. அப்போது கப்பலில் அமர்ந்திருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்குள் சண்டையிட்டும், ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டும் பொழுது போக்குவீர்கள? அல்லது, எல்லோரும் ஒரே மனத்துடன் ஒன்று கூடி, ஓட்டையை முடிந்த அளவு அடைக்க முயற்சி செய்வீர்களா? நாம் எல்லோரும் நம் இதயத்தின் ரத்தத்தை மகிழ்ச்சியுடன் கொடுத்து இதைச் செய்வோம்! தோல்வியுற்றால் எல்லோரும் ஒருங்கே அழிவோம், சாபத்துடன் அல்ல, வாழ்த்துக்களுடன் அழிவோம்.
Saturday, August 9, 2008
Subscribe to:
Posts (Atom)